செவ்வாய், 13 நவம்பர், 2012

<> கொள்ளு சூப் <>



கொள்ளு சூப்


                          
தேவையான பொருள்கள்:-
கொள்ளு – 4 ஸ்பூன்
பூண்டு - 5 பல்
தக்காளி - 2
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
துவரம்பருப்பு – 1 ஸ்பூன்
பெருங்காயம் - 1ஃ2 ஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிது
கறிவேப்பிலை – சிறிது

தாளிக்க
நல்லெண்ணெய் - சிறிது
கடுகு - சிறிது
வரமிளகாய் - 2

செய்முறை

ஒரு வாணலியில் எண்ணெய் விடாமல் துவரம்பருப்பு, கொள்ளை சிவக்க வறுத்துக்கொள்ளவும். மேலே கூறிய அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். அரைத்தக் கலவையில் 5 டம்ளர் (தேவையான) தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வைக்கவும். வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,வரமிளகாய்,கறிவேப்பிலை, மஞ்சள் தூள் போட்டு தாளித்து கரைத்து வைத்த கலவையை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.நன்கு கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கித் தேவையான அளவு உப்பு சேர்த்து அத்துடன் கொத்தமல்லித்தழை தூவி பறிமாறலாம்.

மருத்துவ குணம்: -
தொப்பை குறைக்க ஒரு கப் கொள்ளு.


கொள்ளுப் பருப்பை ஊற வைத்து,அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும்.அதேபோல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு.மேலும் இதில் அதிகளவு மாவுச் சத்து உள்ளது.கொள்ளுப் பருப்பை ஊற வைத்தும் சாப்பிடலாம் வறுத்தும் சாப்பிடலாம்.

கொள்ளை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும். உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தும். வயிற்றுப்போக்கு,வயிற்றுப்பொருமல்,கண்ணோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும்.வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மாதாந்திர ஒழுக்கை சரிப்படுத்தும்.பிரசவ அழுக்கை வெளியேற்றும்.கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும்.

எலும்புக்கும்,நரம்புக்கும் உரம் தரக் கூடியது கொள்ளுப் பருப்பு என்பதால் அதனைக் கடினமான பணிகளைச் செய்யும் குதிரைக்கும் முன்னோர்கள் அளித்தனர்.குதிரைகள் பல மைல் தூரம் ஓடும் சக்தியை பெற்றுள்ளது அனைவரும் அறிந்ததே.ஆனால் அந்த சக்தியின் ஒரு பகுதி அவை உண்ணும் கொள்ளுப் பருப்பில் இருந்தும் கிடைக்கிறது என்பதைப் பலர் உணர்ந்திருக்க மாட்டார்கள்.கொள்ளு உடலில் இருக்கும் கொழுப்பு - ஊளைச் சதையைக் குறைப்பதோடு உடலுக்கு அதிக வலுவைக் கொடுக்கக் கூடியது.

வனதேவதைகளுக்குக் காணிக்கையாகக் கொள்ளுப் பருப்பை இறைத்து விடுவார்கள்.மேலும் கொள்ளுப் பருப்பை வேகவைக்கும் போது அதில் இருந்து வெளியேறும் ஒருவித வாசனை வனதேவதைகளையும் ஈர்க்கக் கூடியது என்றும் அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ளது.இந்தப் பொடியில் சாதம் கலந்து கேதுவுக்கு வேண்டுதல் செய்வார்கள்.இதற்கு கானாப் பொடி என்றும் பெயர்.

குழந்தைகளுக்கு சளி பிடித்து இருந்தால் கொள்ளு சூப் வைத்து குடுத்துப்பாருங்கள்.
சளி காணாமல் போயிவிடும் என்கிறார்கள்.அப்படி ஒரு அருமையான மருத்துவ குணம் இந்த கொள்ளுக்கு உண்டு.உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் அருந்தலாமாம்.குளிர்காலத்தில் தான் அதிகம் சளி பிடிக்கும் அந்த காலங்களில் இந்த சூப் குடித்தால் சளி பிடிக்காதாம்.சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும்.அதை விட ராத்திரி ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் முதலில் அதை சாப்பிட்டு விடுங்கள்.இது நிச்சயம் எடையை குறைக்கும் என்கிறார்கள்.

கொள்ளை ஆட்டி பால் எடுத்து(தண்ணீர்க்குப் பதில்)அதில் சூப் வைத்தால் இன்னும் சுவையாக இருக்கும். கொள்ளை அரைத்து பொடி செய்து வைத்துக்கொண்டால் ரசம் வைக்கும் போது பயன்படுத்தலாம்.(நாம் எப்போதும் வைக்கும் ரசத்தில் ஒரு ஸ்பூன் கொள்ளு பொடியை போட்டால் அருமையாக இருக்கும்)இ‌ப்படி செ‌ய்ய முடியாதவ‌ர்க‌ள் கொள்ளு ரச‌ம்,கொள்ளு துவைய‌ல்,கொள்ளு குழ‌ம்பு ஆ‌கியவை வை‌த்து அ‌வ்வப்போது உ‌ண்டு வ‌ந்தாலு‌ம் உட‌ல் எடை குறையு‌ம்.



இளைத்தவன் எள்ளு விதைப்பான்,கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்பது பழமொழி.இளைத்தவன் எள்ளு விதைப்பான் என்றால் இளைப்பு - களைப்பு உள்ளிட்ட உபாதைகள் உள்ளவர்கள் எள்ளு சாப்பிட்டால் ஊக்கம் பெறுவார்கள்.


சிலருக்கு வாயுக்களின் சீற்றத்தால் எப்போதும் வயிறு மந்தமாகவே இருக்கும். சிறிது சாப்பிட்டால் கூட நாள் முழுவதும் பசியே தோன்றாது. சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருந்தும் சாப்பிட முடியாமல் தவிப்பார்கள். இவர்கள் கொள்ளுவை அரிசியுடன் சேர்த்து கஞ்சியாகவோ, கொள்ளுவை வறுத்து துவையலாகவோ அல்லது ரசம் செய்தோ சாப்பிட்டு வந்தால் நன்கு பசி உண்டாகும்.
வற்றிய உடம்பு தூணாம் வாதமும் பித்துங் குக்கி

சுற்றிய கிராணி குன்மஞ் சுரம்பல சுவாச காசம்

உற்றடர் கண்ணன் புண்ணோ டுறுபிணி யொழியும் வெப்பைப்

பெற்றிடுங் காணச் சாற்றாற் பெருஞ்சல தோடம் போம்

கொள்ளு இரசம் உடலை வலுவாக்கும். மாதவிலக்கை சீர்படுத்தும். கை கால் மூட்டு வலி, இடுப்பு வலியைப் போக்கும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். ஆண்மை சக்தியைப் பெருக்கும்.

உடல் பருத்து (தொளதொளவென்று) தசை இறுக்கமில்லாமல் இருப்பவர்கள் கொள்ளுவை கஞ்சி செய்து சாப்பிட்டு வந்தால் தசைகள் இறுகி வலுப்பெறும். தேவையற்ற நீர் வெளியேறும். 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக